இஸ்ரேல் உறவை துண்டிக்கக் கோரி பாராளுமன்றத்தை நோக்கி பேரணி!


ராம்லீலா மைதானத்தில் இருந்து துவங்கிய பேரணி ஜந்தர்மந்தரில் முடிவடைந்தது. இதனைத் தொடர்ந்து நடைபெற்ற தர்ணாவில் கலந்துகொண்டு டெல்லி ஃபதேஹ்பூரி ஷாஹி இமாம் முஃப்தி முஹம்மது முகர்ரம் உரை நிகழ்த்தினார்.


அவர் தனது உரையில், “இஸ்ரேலுடன் இந்தியா ஏற்படுத்திய தூதரக உறவு, சியோனிச எதிர்ப்பாளரான காந்தியின் கொள்கைக்கு எதிரானதாகும். குறைந்த காலத்திலேயே இஸ்ரேல், இந்தியாவை தங்களின் மிகப்பெரிய ஆயுத சந்தையாக மாற்றிவிட்டது.” என்று கூறினார்.

பேரணியில் கலந்துகொண்ட சோசியல் டெமோக்ரேடிக் பார்டி ஆஃப் இந்தியாவின் தேசிய பொதுச்செயலாளர் ஹாஃபிஸ் மன்சூர் அலி கான் தனது உரையில் கூறியது, “இஸ்ரேல் இந்தியாவின் பல மாநிலங்களுடன் உறவை ஏற்படுத்தியுள்ளது. இது இந்திய சட்டங்களுக்கு எதிரானதாகும். பல்வேறு வழக்கு விசாரணைகளில் இஸ்ரேல் உளவுத்துறையான மொஸாத் நிரந்தரமாக தலையிட்டு வருகிறது. இந்திய உளவுத்துறை மீது இஸ்ரேலுக்கு நம்பிக்கை இல்லை என்பதையே இது எடுத்து காட்டுகிறது” என்றார் அவர்.
பேரணியில் கலந்துகொண்ட பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய தலைவர் இ.எம்.அப்துற்றஹ்மான் தனது உரையில், “இஸ்ரேலுடன் வலுப்பெற்று வரும் சிவில்-ராணுவ உறவு இந்தியாவின் ஜனநாயக மதசார்பற்ற விழுமியங்களை கடுமையாக மீறியதாகும். இஸ்ரேல் ஏஜன்சிகளை இந்தியாவின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிட அனுமதிப்பது நமது போலீஸ், ராணுவத்தின் அதிகாரங்களை பலவீனப்படுத்துவதாகும்.” என்று கூறினார்.
இஸ்ரேலுடனான உறவை கைவிட மத்திய அரசு தயாராகவேண்டும் என கோரி அமைப்பின் பிரதிநிதிகள் பிரதமருக்கு மனு அளித்தனர்.

இந்தியன் இஸ்லாஹி மூவ்மெண்ட் தலைவர் அப்துல் வஹாப் கில்ஜி, ஆல் இந்தியா மில்லி கவுன்சில் பொதுச்செயலாளர் டாக்டர் மன்சூர் ஆலம், ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சில் தலைவர் மவ்லானா உஸ்மான் பேக், இந்திய நேசனல் லீக் தலைவர் டாக்டர்.பஷீர் அஹ்மத் கான், பிரபல தலித் தலைவர் டாக்டர்.உதித் ராஜ், என்.சி.ஹெச்.ஆர்.ஓ செயலாளர் வழக்கறிஞர் எ.முஹம்மது யூசுஃப், கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய தலைவர் அனீஸ்ஸுஸமான் ஆகியோர் கலந்துகொண்டனர்.