வெற்றிக்கு மட்டுமல்ல; தோற்கடிக்கவும் ஒரு கூட்டணி
மகாராஷ்டிராவில், காங்கிரஸ் கூட்டணியில் உள்ளது பவாரின் தேசியவாத காங்கிரஸ்; அதுபோல, பால் தாக்கரேயின் சிவசேனா கட்சியோ, பல ஆண்டுகளாக பா.ஜ., கூட்டணியில் உள்ளது. இதில் சிவசேனாவும், தேசியவாத காங்கிரசும் ரகசிய உடன்பாடு வைத்துக் கொண்டு, தங்கள் தோழமைக் கட்சிகளுக்கு "நம்பிக்கை துரோகம்' செய்கின்றன. இப்படி நம்பிக்கை துரோகம் செய்கிறது தன் தோழமைக் கட்சி என்று தெரிந்தும், அதை கூட்டணியில் இருந்து நீக்கவும் முடியவில்லை. காரணம், தேசியவாத காங்கிரஸ் தயவில் தான் காங்கிரஸ் உள்ளது; அதுபோல, சிவசேனா தயவில் தான் பா.ஜ., உள்ளது. சமீப காலமாகவே, பொதுக்கூட்டங்களில் சிவசேனாவைத் தாக்கி, தேசியவாத காங்கிரஸ் கட்சியினர் பேசுவதில்லை.
தேசியவாத காங்கிரஸ் தலைவரும், மாஜி துணை முதல்வருமான ஆர்.ஆர்.பாட்டீல், சமீபத்தில் ஒரு கூட்டத்தில் பேசும் போது, "சில காரணங்களுக்காக சிவசேனாவை நான் விமர்சிக்க தயாரில்லை' என்று பகிரங்கமாகவே குறிப்பிட்டது, அதன் தோழமைக் கட்சியான காங்கிரஸ் தலைவர்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தியது. சிவசேனாவுடன் பகைத்துக்கொள்ள முடியாவிட்டாலும், ரகசியமாக அதற்கு பாடம் புகட்ட பா.ஜ., திட்டமிட்டுள்ளது. அதனால், சிவசேனாவில் இருந்து பிரிந்து சென்ற பால் தாக்கரேயின் சகோதரி மகன் ராஜ் தாக்கரேயின் மகாராஷ்டிர நவ நிர்மாண் கட்சியுடன் ரகசிய பேரம் நடத்த திட்டமிட்டுள்ளது. இதன்படி, சிவசேனா நிற்கும் தொகுதிகளில் ராஜ் தாக்கரே வேட்பாளர்களுக்கு பா.ஜ.,வினர் ஓட்டு போடுவர். இதன் மூலம், சிவசேனா வெற்றி பெறுவதை பா.ஜ.,வே தடுக்க முயற்சிக்க உள்ளது. எனினும், இந்த ரகசிய உடன்பாட்டுக்கு உள்ளூர் தலைவர்கள் தான் முயற்சி செய்து வருகின்றனர். மேலிடத்துக்கு எந்த தொடர்பும் இருப்பதாக தெரியவில்லை.