முஸ்லிம்களை ஓட்டு வங்கியாக பயன்படுத்தும் கட்சிகள்
லக்னோ:உத்தரப்பிரதேசத்தில் தேசியக் கட்சிகளைச் சார்ந்திருந்த முஸ்லிம் அமைப்புகள் தற்போது தன்னிச்சையாக தேர்தலில் குதித்துள்ளன.உத்தரப்பிரதேசத்தில் 80 லோக்சபாத் தொகுதிகள் உள்ளன. இந்த மாநிலத்தில் உள்ள மொத்த ஓட்டுகளில் 20 சதவீதம் முஸ்லிம்களுடையது. குறிப்பாக, உத்தரப்பிரதேசத்தின் மேற்குப் பகுதியில் உள்ள முசாபர்நகர், அம்ரோகா, மொராதாபாத்தில் மட்டும் 17 சதவீத ஓட்டுகள் முஸ்லிம்களுடையது.
மும்பையில் கடந்த நவம்பரில் தாஜ் ஓட்டல் உள்ளிட்ட இடங்களில் நடந்த தாக்குதலுக்குப் பிறகு முஸ்லிம் இளைஞர்களை போலீசார் கொடுமைப்படுத்துவதாக உலேமா கவுன்சில் குறை கூறியுள்ளது.இதுகுறித்து உலேமா கவுன்சில் ஒருங்கிணைப் பாளர் அமீர் ரஷாதி மதானி கூறியதாவது: எங்களை ஓட்டு வங்கிகளாகத் தான் அரசியல் கட்சிகள் பயன்படுத்துகின்றன. அசம்கார் முதலிய இடங்களில் அப்பாவி முஸ்லிம்களுக்கு எதிராக போலீசார் அராஜகமாகச் செயல்பட்டனர்.
அரசியல் கட்சிகள் யாரும் இதை தட்டிக் கேட்கவில்லை.எனவே, எங்கள் உரிமையை நிலைநாட்டுவதற்காக 12 இடங்களில் லோக்சபாத் தேர்தலில் போட்டியிட உள்ளோம். முஸ்லிம்கள் பெருவாரியாக எங்களுக்கு ஓட்டளிப்பர்.காங்கிரஸ் கட்சியின் கோட்டையாகக் கருதப்படும் அமேதி, ரேபரேலி தொகுதியிலும் எங்கள் கட்சியின் சார்பில் வேட்பாளர்களை நிறுத்த உள்ளோம்.இவ்வாறு அமீர் கூறினார்.
முஸ்லிம்களுடன் முஸ்லிம் அல்லாதவர்களையும் வேட்பாளர்களாக அறிவிக்க, "அமைதி கட்சி' முடிவு செய்துள்ளது.இதுகுறித்து இந்தக் கட்சியின் தலைவர் அர்ஷாத் குறிப்பிடுகை யில், "10 இடங்களில் முஸ்லிம் வேட்பாளர்களையும், 20 இடங்களில் முஸ்லிம் அல்லாத வேட்பாளர்களையும் களமிறக்குகிறோம். எங்களது செல்வாக்கைக் காட்டுவதற்காக லக்னோவில் பேரணிக்கு ஏற்பாடு செய்திருக்கிறோம்' என்றார்.