உங்களுக்காக…(சுயபரிசோதனை)!
அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய ஏக இறைவனின் திருப்பெயரால்..
‘நிச்சயமாக உங்கள் மீது பாதுகாவலர்கள் (நியமிக்கப்பட்டு) இருக்கின்றனர். அவர்கள் கண்ணியம் வாய்ந்த எழுத்தாளர்கள். நீங்கள் செய்கிறதை அவர்கள் அறிகிறார்கள்.’ (திருக்குர்ஆன் 82:10,11,12)
அன்பின் சகோதர, சகோதரிகளே..!
நாளை (இன்ஷா அல்லாஹ்..) மறுமையில் அல்லாஹ்விடத்தில் உங்கள் கணக்குகளை ஒப்படைக்கும் முன்பாக உங்களை நீங்களே பரிசோதித்துக்கொள்ளுங்கள்.
இன்று, ஐவேளைக்கால தொழுகைகளை ஜமாத்தோடு நிறைவேற்றினீர்களா?
உபரியான (சுன்னத், நபில்) வணக்கங்களை நிறைவேற்றினீர்களா?
இன்று, காலையில் விழித்தது முதல் இரவு தூங்கும் வரை ரசூல் (ஸல்) அவர்கள் கற்று தந்த திக்ரு, துஆக்களை பொருளுணர்ந்து முடிந்த வரை ஓதினீர்களா?
இன்று, திருக்குர்ஆனில் ஏதேனும் ஐந்து வசனங்களையாவது பொருளுணர்ந்து படித்தீர்களா?
முன் பின் பாவங்கள் மன்னிக்கப்பட்ட நபி (ஸல்) அவர்களே ஒரு நாளைக்கு 100 முறையாவது பாவ மன்னிப்பு கேட்பார்கள். இன்று காலையில் இருந்து நீங்கள் எத்தனை முறை பாவ மன்னிப்பு கோரினீர்கள்?
இஸ்லாத்தை அழிக்கத் துடிக்கும் எதிரிகள் நேர் வழி அடைய அல்லது அவர்களது சூழ்ச்சிகளில் இருந்து முஸ்லிம் சமுதாயம் பாதுகாக்கப்பட அல்லாஹ்விடம் பிராத்தனை புரிந்தீர்களா?
இன்று, உங்களைச்சுற்றியுள்ள மாற்று மதச்சகோதரர்களிடமும், முஸ்லிமாக இருந்தே இஸ்லாத்தை அறியாமல் இருக்கும் சகோதரர்களிடமும் இஸ்லாத்தின் ஏதேனும் ஒரு செய்தியினையாவது எத்தி வைத்தீர்களா?
இன்று, இஸ்லாத்தை நிலை நிறுத்த உலகமெங்கும் போராடிக் கொண்டிருக்கும் உங்கள் சகோதர, சகோதரிகளுக்காக பிராத்தனை புரிந்தீர்களா?
இன்று, காலை முதல் இரவு வரை யாரையாவது மனம் புண்படும் படி பேசியதற்காக, பின்னர் சம்பந்தப்பட்டவரிடம் மன்னிப்பு கேட்டீர்களா?
இன்று, உங்கள் நாவை வீணான பேச்சு, பொய், புறம், அவதூறு ஆகியவற்றிலிருந்து பாதுகாத்துக் கொண்டீர்களா?
இன்று, உங்களை நம்பி ஒப்படைக்கப்பட்ட அமானிதங்களை பேணிப் பாதுகாத்தீர்களா?
இன்று, நீங்கள் பிறருக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறை வேற்றினீர்களா?
இன்று, தீயப் பார்வை பார்ப்பதை விட்டும், தீயதைக் கேட்பதை விட்டும் உங்கள் கண்களையும், காதுகளையும் பாதுகாத்துக் கொண்டீர்களா?
இன்று, உங்கள் செல்வத்திலிருந்து ஒரு திர்ஹமாவது இறைவழியில் செலவழித்தீர்களா?
இன்று, தீமையான காரியங்கள், இழப்புகள் ஏற்பட்ட போது பொறுமையைக் கடைப்பிடித்து அல்லாஹ்வையே முழுமையாக சார்ந்தீர்களா?
இன்று, நன்மையான காரியங்கள் நிகழ்ந்த போது மறக்காமல் அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தி அவனைப் புகழ்ந்தீர்களா?
குறிப்பாக, எல்லாவற்றுக்கும் மேலாக இன்று காலையில் இருந்து நீங்கள் செய்த எல்லா நல் அமல்களையும் அல்லாஹ்வின் திருப்தியை மட்டும் எதிர் பார்த்து செய்தீர்களா?
‘இறை நம்பிக்கைக் கொண்டவர்களே! (வழி தவறி விடாமல் நீங்களே) உங்களைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள், நீங்கள் நேர் வழியைப் பின்பற்றுவீர்களானால், வழி தவறியவர்கள் உங்களுக்கு ஒரு தீங்கும் செய்ய முடியாது. அல்லாஹ்வின் பக்கமே நீங்கள் அனைவரும் மீள வேண்டியிருக்கின்றது, நீங்கள் செய்து கொண்டிருந்தவற்றையெல்லாம், அப்போது அவன் உங்களுக்கு உணர்த்துவான்’ (திருக்குர்ஆன் 5: 105)