ஹஸன் ரூஹானி ஈரான் அதிபர் தேர்தலில் வெற்றி!

சீர்திருத்தவாதியாக அறியப்படும் ஈரானின் ஷியா அறிஞர் டாக்டர்.அலி ஹஸன் ரூஹானி அந்நாட்டின் 11-வது அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.பதிவான வாக்குகளில் 50 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றுள்ள ரூஹானி, அஹ்மத் நஜாதிற்கு அடுத்து ஈரானின் தலைமைப் பதவியை வகிக்க உள்ளார்.

நஜாதை விட கடுமையானவர் என்று மேற்கத்திய ஊடகங்கள் வர்ணித்த, அதிபராவார் என கருதப்பட்ட ஸஈத் ஜலீலி நான்காவது இடத்தைப் பிடித்துள்ளார். 3,67,04,156 வாக்குகளை எண்ணியபொழுது ரூஹானிக்கு 1,86,13,329 வாக்குகள் கிடைத்துள்ளன.அவருக்கு அடுத்து முன்னாள் போலீஸ் தலைவரும், டெஹ்ரான் மேயருமான முஹம்மது பாகிர் காலிஃபாப் 60,77,292 வாக்குகளைப் பெற்றுள்ளார்.15.8 சதவீத வாக்குகள் காலிஃபாபிற்கு கிடைத்துள்ளது.

ரெவலூஸனரி கார்டின் முன்னாள் தலைவர் முஹ்ஸின் ரிஸாஇக்கு 11.34 சதவீத வாக்குகள் கிடைத்துள்ளன.ஸஈத் ஜலீலிக்கு 11.46 சதவீத வாக்குகளும், முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சரும், 15 ஆண்டுகளாக ஈரானின் ஆன்மீக உயர் தலைவர் காம்னஈயின் வெளியுறவுத்துறை ஆலோசகராகவும் உள்ள அலி அக்பர் விலாயத்திக்கு 6.06 சதவீத வாக்குகளும் கிடைத்துள்ளன.முன்னாள் அமைச்சர் முஹம்மது கராஸிக்கு 1.18 சதவீத வாக்குகள் கிடைத்துள்ளன.வெள்ளிக்கிழமை நடந்த வாக்குப்பதிவில் 73 சதவீத வாக்குகள் பதிவானதாகவும், வாக்குப்பதிவு முற்றிலும் அமைதியாக நடந்ததாகவும் தேர்தலுக்கு தலைமைப் பொறுப்பை வகித்த உள்துறை அமைச்சர் முஸ்தஃபா முஹம்மது நஜ்ஜார் தெரிவித்துள்ளார்.

63 வயதான ரூஹானி, 16 ஆண்டுகளாக அணு விவகாரத்தில் வெளிநாடுகளுடனான ஈரானின் பேச்சுவார்த்தையில் மத்தியஸ்தராக உள்ளார்.1989 ஆம் ஆண்டு முதல் பாதுகாப்புக் குழுவின் தலைவராகவும், இரண்டு தடவை பாராளுமன்ற துணை சபாநாயகராகவும் பணியாற்றியுள்ளார்.ஆயத்துல்லாஹ் அலி காம்னஈ உடன் நெருக்கமான ரூஹானி, ஈரானின் சீர்திருத்தவாதிகள் மற்றும் தாராளவாதிகளுக்கு விருப்பமானவர். ஈரானின் இஸ்லாமிய குடியரசின் ஸ்தாபகரான ஆயத்துல்லாஹ் கொமைனியுடன் மாணவராக இருக்கும்போது தொடர்பில் இருந்தவர். அமெரிக்கா தலைமையிலான மேற்கத்திய சக்திகளுக்கு எதிராக சமரசமில்லாத நிலைப்பாட்டை கடைப்பிடிக்கும் ஈரானில் நடந்துள்ள அதிபர் தேர்தல் சர்வதேச அளவிலும் சலனங்களை உருவாக்கும்.

Related

முக்கியமானவை 668753974076706446

Post a Comment

emo-but-icon

Follow Us

Follow

Hot News

Recent

Archive

LOGO

E-mail

செய்திகளை இ-மெயிலில் பெற இ-மெயில் முகவரியை கொடுக்கவும்

Koothanallur Muslims

Mobile App

Connect Us

item