தெற்கில் வாடும் தாமரை!

நாடாளுமன்ற தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெறவுள்ளது. தேர்தலை எதிர்கொள்ள கட்சிகள் தற்போதே ஆயத்தமாகிவிட்டன. சில தொகுதிகளில் தங்களின் வேட்பாளர்களை கூட சில கட்சிகள் அறிவித்து விட்டன.

மக்களை கவருவதற்கான கவர்ச்சி திட்டங்கள், வாக்குறுதிகள், சலுகைகள் இப்போதே ஆரம்பித்து விட்டன.

ஏறத்தாழ பத்து ஆண்டுகளாக எதிர்கட்சி அந்தஸ்தை வகித்து வரும் பாரதிய ஜனதா கட்சி இத்தேர்தலில் எப்படியும் வெற்றி பெற்றாக வேண்டும் என்ற நிர்பந்தத்தில் உள்ளது. ஆனால் பதவியை பிடிப்பது என்பது அவ்வளவு எளிதான காரியமல்ல. ஜன சங்கம் என்று பெயர் பெற்றிருந்த காலம் தொட்டே பாஜக ஒரு வட இந்திய கட்சியாகதான் பார்க்கப்பட்டு வருகிறது. அத்துடன் அவர்கள் மேற்கொண்டு வரும் இந்துத்துவ கொள்கையும் அவர்களை மக்களை விட்டும் தூரமாக்கியே வைத்துள்ளது.

பாஜக தன்னை ஒரு தேசிய கட்சியாக கூறி வந்த போதிலும் புள்ளி விபரங்கள் அக்கட்சி தென் இந்தியாவில் இன்னும் கால் பதிக்கவில்லை என்பதைதான் காட்டுகின்றன. தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா மற்றும் ஆந்திரா ஆகிய நான்கு மாநிலங்களிலும் மொத்தம் 130 நாடாளுமன்ற தொகுதிகள் (பாண்டிச்சேரி உட்பட) உள்ளன. பாராளுமன்றத்தின் மொத்த எண்ணிக்கையில் இது ஏறத்தாழ நான்கில் ஒரு பங்காகும்.

இந்த நான்கு மாநிலங்களிலும் சென்ற முறை நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் பாஜகவால் வெறும் 19 இடங்களில் மட்டுமே வெற்றி பெற முடிந்தது. இந்த 19 தொகுதிகளும் கர்நாடகாவில் உள்ளவை. தமிழ்நாடு, கேரளா மற்றும் ஆந்திராவில் ஒரு இடத்தில் கூட இவர்களால் வெற்றி பெற முடியவில்லை. 2004 நாடாளுமன்ற தேர்தலிலும் இதே நிலைதான். அப்போதும் இவர்களால் கர்நாடகாவில் மட்டும் 18 தொகுதிகளில் வெற்றி பெற முடிந்தது.

தென் இந்தியாவில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தல்களிலும் இவர்களால் பெறிய அளவில் சாதிக்க முடியவில்லை. நடைபெற்ற தேர்தல்களில் எல்லாமல் கணிசமான எண்ணிக்கையில் இவர்கள் வேட்பாளர்களை நிறுத்தினர். ஆனால் போட்டியிட்ட பெரும்பான்மையான இடங்களில் இவர்களின் வேட்பாளர்களால் டெபாசிட்டை கூட தக்க வைக்க முடியவில்லை என்பது தான் உண்மை. தற்போதைய தமிழ்நாடு மற்றும் கேராள சட்டமன்றங்களில் இவர்களுக்கு ஒரு உறுப்பினர் கூட கிடையாது. ஆந்திராவில் வெறும் மூன்று எம்.எல்.ஏ.க்கள் இவர்கள் வசம் உள்ளனர். கர்நாடகாவில் சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் 36 இடங்களில் வெற்றி பெற்றனர்.

திராவிட பாரம்பரியம் மிக்க தமிழகம் இந்துத்துவத்தை முழுமையகா எதிர்த்து வந்ததால் இவர்களால் தமிழகத்தில் காலூன்ற முடியவில்லை. இருந்த போதும் இரு திராவிட கட்சிகளான திமுக அல்லது அதிமுகவுடன் கூட்டணி வைப்பதில் பாஜக வெற்றி கண்டது. 1998 பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் இருந்து முதன் முறையாக மூன்று பாஜக உறுப்பினர்கள் பாராளுமன்றத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அடுத்த ஆண்டு நடைபெற்ற தேர்தலில் இந்த எண்ணிக்கை நான்காக உயர்ந்தது. ஆனால் அதன்பின்னர் நடைபெற்ற மூன்று பாராளுமன்ற தேர்தல்களிலும் பாஜகவால் ஒரு இடத்தில் கூட வெற்றி பெற முடியவில்லை. தற்போதைய சூழ்நிலையில் பாஜகவுடன் கூட்டணி வைத்துக் கொள்ள எந்த திராவிட கட்சியும் தயார் இல்லை. பாஜகவின் கூட்டு எங்கே தங்களின் பாரம்பரிய வாக்கு வங்கியை இழக்கும் நிலைக்கு தங்களை தள்ளி விடுமோ என்ற அச்சம்தான் இவர்களின் தயக்கத்திற்கு காரணம். சென்ற பாராளுமன்ற தேர்தலில் தனித்து களம் கண்ட பாஜக மோசமான தோல்வியை சந்தித்தது.

தமிழக சட்டமன்ற தேர்தல்களிலும் இதே நிலைதான். எதிர் வரும் பாராளுமன்ற தேர்தலிலும் இதே நிலைதான் தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் வரும் தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்பதற்கான கீழ்த்தரமான வேலைகளில் இப்பொழுதில் இருந்தே அவர்கள் சார்ந்த சங்பரிவார்கள் இறங்கியுள்ளனர். இவர்கள் சற்று பெரும்பான்மையாக உள்ள கோவை மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் பிரச்சனைகளை ஏற்படுத்தி அதன் மூலம் அரசியல் ஆதாயம் தேட ஆரம்பித்துள்ளனர்.

கேரளாவிலும் இவர்களுக்கு சட்டமன்றத்திலும் பாராளுமன்றத்திலும் எவ்வித பிரதிநிதித்துவமும் கிடையாது. இவர்களின் பிறப்பிடமான ஆர்.எஸ்.எஸ். இயக்கம் கேரளாவில் செயல்பட்டு கொண்டிருந்தாலும் அதனை கொண்டு அவர்களால் வாக்குகளை பெற முடியவில்லை. சங்பரிவார்களை மக்கள் ஒட்டுமொத்தமாக நிராகரித்து விட்டனர் என்பதைதான் இது காட்டுகிறது. ஆந்திராவிலும் இதே நிலைதான் உள்ளது.

நான்கு தென் மாநிலங்களிலும் பாஜகவிற்கு கர்நாடகாவில் மட்டும் சிறிதளவு செல்வாக்கு உள்ளது. தென் இந்தியாவில் தாங்கள் ஆட்சியில் அமர்ந்த முதல் மாநிலம் என்று பெருமையுடன் கூறினர். இதனை ஒரு தொடக்கமாக கொண்டு மற்ற தென் மாநிலங்களிலும் நுழைந்து விடுவோம் என்று ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் வீர முழக்கம் செய்தனர். ஆனால் ஐந்து வருடங்களில் நிலைமை தலைகீழாக மாறியுள்ளது. ஊழல், பாசிசம், ஆபாசம் என அனைத்தையும் தன்னகத்தே கொண்ட பாஜகவிற்கு மக்கள் தகுந்த பாடத்தை சமீபத்திய சட்டமன்ற தேர்தலில் கொடுத்தனர். சென்ற முறை 110 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தவர்களால் தற்போது வெறும் 36 இடங்களில் மட்டுமே வெற்றி பெற முடிந்தது. அத்துடன் 110 தொகுதிகளில் டெபாசிட்டையும் இழந்து படுதோல்வியை சந்தித்தனர். சட்டமன்ற தேர்தல்களில் இவர்கள் கண்ட தோல்வி எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலிலும் வெளிப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தென் இந்தியாவின் வாக்காளர்களின் மனநிலையும் அங்குள்ள புள்ளி விபரங்களும் அவர்கள் பாஜக உறுப்பினர்களை நாடாளுமன்றத்திற்கு அனுப்ப தயாரில்லை என்பதை காட்டுகின்றன. அடிமட்ட தொண்டர்களின் எண்ணிக்கையும் அவர்களின் பங்களிப்பும் குறைந்த அளவிலேயே உள்ளன. கட்டுக்கோப்பான கட்சி என்று கூறி வந்த பாஜகவில் தற்போது உள்கட்சி மோதல்களிலும் எவ்வித குறைவுமில்லை. வரும் நாடாளுமன்ற தேர்தலில் கர்நாடகாவில் தாங்கள் பெற்ற 19 தொகுதிகளை தக்கவைத்தால் அதுவே பாஜகவிற்கு மிகப்பெரும் சாதனைதான். பாஜகவின் தோல்வி என்பது தெற்கில் ஏற்கெனவே உறுதி செய்யப்பட்டதுதான். வரும் நாடாளுமன்ற தேர்தல் அதனை மேலும் உறுதிபடுத்தும்.

(கட்டுரையாசிரியர் newindia.tv ஆங்கில இணையதளத்தின் ஆசிரியர். riaz@newindia.tv முகவரியில் அவரை தொடர்பு கொள்ளலாம்)

Related

முக்கியமானவை 475794352278907191

Post a Comment

emo-but-icon

Follow Us

Follow

Hot News

Recent

Archive

LOGO

E-mail

செய்திகளை இ-மெயிலில் பெற இ-மெயில் முகவரியை கொடுக்கவும்

Koothanallur Muslims

Mobile App

Connect Us

item