ஈரான் அணு குண்டு தயாரிக்க முடியும்
http://koothanallurmuslims.blogspot.com/2009/10/blog-post.html
ஈரான் நாட்டிடம் அணு குண்டுகள் தயாரிக்கத் தேவையான தொழில்நுட்பம் உள்ளது. எனவே அந்த நாடு நினைத்தால் அணு குண்டு தயாரிக்க முடியும் என்று சர்வதேச அணு சக்தி ஏஜென்சி தெரிவித்துள்ளது.
இதனால் அமெரிக்கா அதிர்ச்சி அடைந்துள்ளது. ஈரானை முடக்க உடனடியாக கடும் நடவடிக்கைளை எடுக்க வேண்டும் என்று குடியரசுக் கட்சி மற்றும் ஜனநாயகக் கட்சி எம்.பிக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து சர்வதேச அணு சக்தி ஏஜென்சி வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், அணு குண்டு தயாரிக்கத் தேவையான தொழில்நுட்பத்தையும், அதற்குத் தேவையான பொருட்கள் குறித்த விவரங்களையும் ஈரான் ஏற்கனவே வைத்துள்ளது. தேவையான தகவல்கள் அதனிடம் உள்ளது. எனவே ஈரான் நினைத்தால் அணு குண்டு தயாரிக்க முடியும்.
அணு குண்டுத் தயாரிக்கத் தேவையான விவரங்கள் ஈரான் நாட்டிடம் இருப்பதை பாகிஸ்தான் அணு விஞ்ஞானி ஏ.க்யூ. கான் உள்ளிட்டோர் உறுதிப்படுத்தியுள்ளனர்.
அணு ஆயுதத் தொழில்நுட்பத்தை வெளிநாடுகளிலிருந்துதான் ஈரான் பெற்றுள்ளதாக தெரிகிறது. அவற்றைப் பெற்று தனது தேவைக்கேற்ப அதை மாற்றியுள்ளதாகவும் அறிகிறோம்.
குண்டு தயாரிக்கத் தேவையான வடிவமைப்புத் தொழில்நுட்பத்தை ஏ.க்யூ. கான்தான் கொடுத்துள்ளார். அதேபோல, ரஷ்ய அணு விஞ்ஞானி ஒருவர் அடிக்கடி ஈரான் போயுள்ளார். அவர் மூலமும் பல்வேறு தகவல்களை ஈரான் பெற்றுள்ளதாக தெரிகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
2 ஆண்டுகளுக்கு முன்புதான் அமெரிக்க உளவுத்துறையினர், 2003ம் ஆண்டிலேயே ஈரானின் அணு ஆயுதத் தயாரிப்பு முயற்சியை தகர்த்து விட்டதாக கூறியிருந்தனர். ஆனால் ஈரானிடம் அணு ஆயுதம் தயாரிக்கத் தேவையான அனைத்து தகவல்களும், தொழில்நுட்பமும் உள்ளதாக சர்வதேச அணு சக்தி ஏஜென்சி தெரிவித்துள்ளது அமெரிக்காவை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
நியூயார்க் டைம்ஸ் இதழ் வெளியிட்டுள்ள இந்த செய்தியைத் தொடர்ந்து ஈரானை ஒடுக்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் போர்க்கால வேகத்தில் மேற்கொள்ள வேண்டும் என ஜனநாயகக் கட்சி மற்றும் குடியரசுக் கட்சி எம்.பிக்கள் அமெரிக்க அரசைக் கேட்டுக் கொண்டுள்ளனர். இதற்காக நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தையும் கூட்டி விவாதித்து முடிவெடுக்க வேண்டும் எனவும் அவர்கள் கோரியுள்ளனர்